தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை: கியூஆர் குறியீடு, கூகுள்பே மூலமும் பணம் செலுத்த ஏற்பாடு

Published On 2023-05-30 07:12 GMT   |   Update On 2023-05-30 08:37 GMT
  • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
  • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News