தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக பவ்யா நியமனம்
- கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து பொறியியல் பட்டம் பெற்றவர் பவ்யா
- 2018ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பவ்யா நரசிம்ம மூர்த்தி
அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதிகள் மார்ச் முதல் வாரம், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.
இத்தேர்தலை சந்திக்க பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.
கட்சியினர் ஆற்றும் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை (communications coordinator) காங்கிரஸ் நியமித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக, பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த பவ்யா நரசிம்ம மூர்த்தி?
பவ்யா நரசிம்ம மூர்த்தி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிறந்து வளர்ந்தவர்.
எம் எஸ் ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்பிருந்தும், அரசியலில் ஈடுபட விரும்பி இந்தியாவிற்கு வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2018ல் அக்கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியுடன் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் மாநில மற்றும் மத்திய தேர்தல் அறிக்கையை தயாரித்தார்.
பெண்கள் நல்வாழ்விற்காக இயங்கும் காங்கிரஸ் கட்சியின் "பிரியதர்ஷினி" அமைப்பில் தலைவராக சிறப்பாக பணிபுரிந்தார்.
காந்திஜியின் சித்தாந்தங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவரான பவ்யா, பா.ஜ.க. கொண்டு வந்த சிஏஏ-விற்கு (CAA) எதிராக கர்நாடகாவில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.
இள வயதில் அரசியலில் நுழைந்தது குறித்து, "அரசியலில் நுழைய விரும்புபவர்கள் தயக்கமின்றி கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். அதை தூய்மைப்படுத்த இள வயதினருக்கு வாய்ப்பு அதிகமுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால், இது நுழைய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்கிறார் பவ்யா நரசிம்ம மூர்த்தி.