எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி: ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை
- ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
- தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்கள் மீது மோதி நின்றது.
இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே பாலங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.