சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு: பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
- நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள்.
- மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. குறிப்பாக மத்திய அரசு மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்திருப்பதால் நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள். மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300 - ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தினால் பெரும் பயனடைவார்கள். பிரதமர் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் நலன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.