நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு உயிரிழப்பு
- கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
- உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.