தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் விபத்து: கப்பலில் கிரேன் உடைந்து விழுந்து ஆபரேட்டர் பலி
- பாரத் கப்பலில் உள்ள கிரேன் மூலம் லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.
- தெர்மல்நகர் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் பனாமா நாட்டின் கியானா கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனை தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மீனவர் காலனி பகுதியை சேர்ந்த பாரத் (வயது40) என்பவர் லேபர் காண்ட்ராக்ட் மூலம் பணிகளை செய்து வந்தார். அதன்படி கப்பலில் உள்ள கிரேன் மூலம் லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே அவர் கிரேனுடன் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு நின்றவர்கள் உடனடியாக மற்றொரு கிரேன் மூலமாக பாரத்தை மீட்டனர்.
அவருக்கு தலையில் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல்நகர் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி துறைமுக கப்பல், தூத்துக்குடி துறைமுகத்திற்குள் கப்பலில் உள்ள பொருட்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் சோதனையிட வேண்டும்.
அதன் பின்னரே கப்பலில் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் சோதனை செய்வதில்லை.
இதனாலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக துறைமுக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.