மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் மீண்டும் முதலை நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்
- சிறுமுகை வனத்துறையினர் கடந்த 18-ந் தேதி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்தனர்.
- வலையின் அருகே ராட்சத முதலை இருப்பதை பார்த்ததும் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் நீர்வழி குட்டை ஒன்று உள்ளது.
வடவள்ளி, தாளத்துறை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடையும் இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கன மழையால் தற்போது வரை தண்ணீர் தேங்கி உள்ளது.
கடந்த 8 மாதங்களாக இந்த குட்டையில் 10 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமுகை வனத்துறையினர் கடந்த 18-ந் தேதி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்தனர்.
அதன்பின் குட்டையில் இருந்த முதலையை வனத்துறை பிடித்து சென்ற பின் அங்கிருந்த மீன்களை மக்கள் பிடித்து சென்றனர். குடியிருப்புகளுக்கு நடுவே சூழ்ந்து இருந்த தண்ணீரிலும் மீன்களை பிடித்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், மீன் பிடிப்பதற்காக குட்டை பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வலை போட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வலையின் அருகே ராட்சத முதலை இருப்பதை பார்த்ததும் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர்.
சில நாட்களுக்கு முன்பு தான் வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தண்ணீரை வெளியேற்றினர். தற்போது ஊற்று நீரால் குட்டை நிரம்பி வருகிறது. இந்த நிலையில் இந்த குட்டையில் மீண்டும் முதலை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே இங்கிருந்த 2 முதலைகளில் ஒன்றை வனத்துறை பிடித்து சென்ற நிலையில் ஒரு வாரத்திற்குள்ளே மீண்டும் ஒரு முதலை வந்திருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.