தமிழ்நாடு

வானம் பார்த்த பூமியில் வாசனைப் பயிர் சாகுபடியா? - காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தெரிஞ்சுக்கலாம்!

Published On 2024-08-30 10:30 GMT   |   Update On 2024-08-31 07:07 GMT
  • பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது.
  • எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.

அரியலூர் மாவட்டம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை ஒட்டி நிற்கும் பகுதி. அரியலூர் மாவட்டத்திற்குள் ஒரு சிலப் பகுதிகள் டெல்டா பகுதிக்குள் வந்தாலும் பெரும்பாலானப் பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. அரியலூர் மாவட்டத்திற்குள் செல்லும் போதே டெல்டா மாவட்டங்களில் இருக்கும் பசுமையான நிலப்பரப்பு சற்றே மாற துவங்குவதை கவனிக்க முடியும். அங்கு மலைப் பகுதிகளில் விளையும் மர வாசனை பயிர்கள் விளையும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதனை சாத்தியப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறார் அரியலூர் மாவட்ட விவசாயி ஒருவர்.

மழை இல்லாத காலங்களில் வறட்சி வந்து விளையாடும் மாவட்டத்தில் தன் நிலத்தை வளம் கொழிக்கும் குளிர்ச்சி பகுதியாக மாற்றியிருக்கிறார் முன்னோடி விவசாயி கே.ஆர். பழனிச்சாமி. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், கருக்கை கிராமத்தில் அமைந்துள்ளது இவரின் பண்ணை. 5 அரை ஏக்கர் பரப்பளவில் வறண்டு கிடக்கும் பகுதியில் புதிதாக உதித்த கொடைக்கானல் போல குளுமையாக அமைந்துள்ளது இவரது "நற்பவி வளர்சோலை" இயற்கை பண்ணை.


பழனிசாமி, சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமா என்ற கேள்வியோடு தொடங்கி இன்று அதில் வெற்றிகரமாக சாதித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவரிடம், பண்ணையில் உள்ள பயிர்கள் என்னென்ன என கேட்ட போது, பூரிப்போடு பேசினார் "என்னுடைய 5 அரை ஏக்கர் தோட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் டிம்பர் மரங்கள் இருக்கின்றன. இதில் தேக்கு, மஹோகனி, வேங்கை, செம்மர, படாக், கடம்பு, கடம்பில் அனைத்து ரகங்கள் என கிட்டத்தட்ட 30 வகையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, நிறைய மூலிகைகள் இங்கு உள்ளது.

இதற்கிடையே மர வாசனை பயிர்களான ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, சர்வ சுகந்தி மூலிகை பயிர் என பல வகை உண்டு. மேலும் பாக்கு, கொய்யா, சப்போட்டா, ஆவக்கோடா, சாத்துக்கொடி, பைனாப்பிள், லிட்சி, பன்னீர் பழம், எல்லாமும் இருக்கிறது. ஹனி ஜாக், கேரளா வகைகள் உள்ளிட்ட 22 வகையான பலாப்பழ மரங்கள் இருக்கின்றன." என அவர் சொல்லும் போது, இவர் பண்ணையில் என்ன தான் இல்லை என்று வியப்பாக இருந்தது.


மலை பிரதேசத்திலும், குளிர் பிரதேசத்திலும் மட்டுமே வளரும் என நம்பப்பட்ட மரங்கள் இந்த சமவெளியில் எப்படி சாத்தியம் என நாம் ஆச்சரியத்துடன் கேட்ட போது, விரிவாக பேசத் தொடங்கினார் "இந்த கேள்வி ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஆனால் இன்று இதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இதற்கு காரணம் சமவெளியில் இந்த பயிர்கள் வளர தேவையான சூழலை நான் உருவாக்கியிருக்கிறேன். இங்கே கொடைக்கானல் போன்ற ஒரு குளுமையான சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோம். அதனால் அங்கு வளரும் எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.

இங்கு பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது. குறிப்பாக பலா மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் தன்மை இருப்பதாக சொல்கிறார்கள். விஞ்ஞான ரீதியாக உண்மையா தெரியாது, ஆனால் என் நிலம் இந்த மரங்களால் குளுமையாக இருக்கிறது. இங்கு எத்தனை நீர் சேர்ந்தாலும் ஒரு போதும் தேங்குவதில்லை. அத்தனை நீரையும் மண் உறிஞ்சி கொள்ளும் அளவும் மண் கண்டம் மிகச் சிறப்பாக உள்ளது.

மேலும் இங்கு உழவில்லா விவசாயம் செய்கிறேன். இரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் என எதுவும் பயன்படுத்துவது இல்லை. மாறாக மாட்டு எரு, பஞ்சக்கவ்யம், மீன் கரைசல் போன்ற இயற்கை இடுப்பொருட்களே பயன்படுத்துகிறேன். இதனால் மண் வளமாக, உயிரோட்டமாக இருக்கிறது. பொதுவாக எங்கள் ஊர் பக்கம் முந்திரி பயிர் தான் பிரதான பயிராக இருக்கும், ஆனால் என் நிலத்தில் அனைத்து வகையான பயிர்களும் வருகின்றன. நான் உருவாக்கிய இந்த மாற்றம், நான் உருவாக்கிய இந்த சூழலாலே சாத்தியம்" என உறுதியாக சொன்னார்.


இந்தப் பண்ணை மூலம் அவருக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக அவர் பயன்படுத்தும் உத்திகள் குறித்து நாம் கேட்ட போது, வெற்றிப் புன்னகையோடு பேசத் தொடங்கினார் "என்னிடம் இப்போது 15 ஆண்டுகள் பழமையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, இவற்றை இனியும் பல வருடங்களுக்கு வெட்டும் எண்ணம் எனக்கு இல்லை. இது என் தலைமுறை கடந்து வருபவர்களுக்கு நான் உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சொத்து. இதை வெட்டாமல் ஊடுபயிர் மூலம் என் வருவாயை ஈட்டி வருகிறேன். உதாரணமாக, கேரளா போன்ற இடங்களில் மட்டுமே விளையும் என சொல்லப்படும் 'எக்ஸாடிக் பழ வகைகளில்' ஒன்றான 'குடம் புளி' இப்போது காய்ப்புக்கு வந்திருக்கிறது. மேலும் இங்கிருக்கும் 100 பலா மரங்களிலிருந்து 2 இலட்சம் வரை வருமானம் வருகிறது. மிளகு சாகுபடியில், பைனாப்பிள் சாகுபடியில் எனப் பல வழிகளில் எனக்கு வருமானம் வருகிறது. மாதத்திற்கு இந்த நிலத்திலிருந்து குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிரந்தர வருமானம் வருகிறது.

மேலும் எங்கள் நிலம் கும்பகோணத்திலிருந்து விருதாச்சலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருப்பதால், எங்கள் நிலத்தின் முன்பாகவே ஒரு இயற்கை அங்காடி வைத்திருக்கிறோம். அங்கு வருபவர்கள் எங்கள் நிலத்தை பார்த்து இது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்பதை தெரிந்து கொண்டு நல்ல விலைகொடுத்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள்." என்றார் உற்சாகமாக.

எனவே கலப்பினப் பயிர்கள், மலையினப் பயிர்கள், வாசனைப் பயிர்கள் என அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் சாத்தியமா என்றால் சாத்தியம் என்பதை அடித்து சொல்கிறார். மேலும் அவருடைய அனுபவத்தை ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் "சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கில் நேரடியாக பகிர்ந்து கொள்ள இருக்கிறார்

இவரைப் போலவே இன்னும் பல முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தை பகிர உள்ளனர்.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News