எந்திரத்தில் மறைத்து கடத்திய ரூ.9.64 லட்சம் தங்கம் பறிமுதல்- சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- சுங்கத்துறை அதிகாரிகள் அதிநவீன ஸ்கேனிங் எந்திரம் மூலம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்கிறார்கள்.
- விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.
வேலை நிமித்தமாகவும், சுற்றுலாவாகவும் வெளிநாடுகளுக்கு செல்வோர் திரும்பி வரும்போது, தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வாறு கடத்தப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்துள்ளது.
இருந்தபோதிலும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிநவீன ஸ்கேனிங் எந்திரம் மூலம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்கிறார்கள்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். அப்போது ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த எந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து எடுத்து வந்த ரூ.9.64 லட்சம் மதிப்பிலான 159 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.