சென்னையில் செல்போன், இணைய தள சேவை முடங்கியதால் மக்கள் அவதி
- செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் நேற்று முதல் பேச முடியவில்லை.
- சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
சென்னை:
மழை வெள்ளத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்த நிலையில் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் 2 நாட்களாக இருளில் மக்கள் மூழ்கினார்கள்.
இந்த நிலையில் நேற்று இணைய தள சேவையும் முடங்கியது. அனைத்து தனியார் நிறுவனங்களின் செல்போன் இணைப்புகளும் செயல்படவில்லை. செல்போன் சேவை செயல் இழந்ததால் தகவல் பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை பாதிப்பு, நிலவரம் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்ட மக்கள் அவை செயல் இழந்ததால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஏற்கனவே மின்சாரம் இல்லாததால் டி.வி., கேபிள் டி.வி. செயல்படவில்லை. இந்த நிலையில் இண்டர்நெட், வாட்ஸ் அப் சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் சென்னையில் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.
செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் நேற்று முதல் பேச முடியவில்லை. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
இதனால் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
வீடுகளில் இருளில் முடங்கிய மக்களுக்கு தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருந்தது. ஆனால் அவை இன்று 2-வது நாளாக முடங்கியதால் யாரையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஒரு சில பகுதிகளில் இன்று மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மோட்டார் பம்ப் செட், மிக்சி, செல்போன் சார்ஜர் செய்வது போன்றவை பயன்பாட்டிற்கு வந்தது.