மிச்சாங் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தயார் நிலையில் தமிழக அரசு
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், முத்துசாமி ஆகியோர் பணிகளை மேற்கொள்வார்கள்.
- 12 மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள், அதிகாரிகள் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சென்னை:
'மிச்சாங்' புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், முத்துசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொள்வார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு அமைச்சர் காந்தி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பொறுப்பு அமைச்சர்களாக இருந்து கண்காணிப்பார்கள்.
கடலூர் மாவட்டத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் மாவட்டத்துக்கு பொன்முடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் 12 மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள், அதிகாரிகள் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.