தமிழ்நாடு

பழனி மலைக்கோவில் ராஜகோபுரத்தில் சேதம் ஏற்பட்டுள்ள காட்சி. 

பழனி மலைக்கோவிலில் ராஜகோபுர அலங்கார வளைவில் சேதம்

Published On 2024-10-01 05:35 GMT   |   Update On 2024-10-01 05:35 GMT
  • பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம்.
  • இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது.

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானைப்பாதை மட்டுமின்றி, விரைவாக செல்ல ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு ஜன.27ம் தேதி பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து 48 நாட்கள் நடந்த மண்டல பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது 5 கோபுர கலசங்களுக்கு இடையில் இருக்கும் அலங்கார வளைவு உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் மிகவும் வேதனையடைந்தனர். விரைவில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News