பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் துறை விசாரணை
- சென்னை சைபர் கிரைம் போலீசார் மத்திய பிரதேசத்தில் உள்ள போலீசாருக்கும், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
- கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தற்போது 6-வது கட்டத்துக்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் 6-வது கட்டத்துக்கான தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இருக்கிறது.
அடுத்து 7-வது கட்டத்துக்கான தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரமாகி வருகிறது. பிரதமர் மோடி இன்று 6-வது மற்றும் 7-வது கட்ட பிரசாரத்துக்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்துக்கு செல்கிறார்.
இந்த இரு மாநிலங்களிலும் 3 வாகன பேரணிகளில் பங்கேற்று அவர் பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார். இதைத் தொடர்ந்து நாளை முதல் உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தீவிரப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு திடீரென கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு போனில் பேசிய மர்ம நபர் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.
புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகம் தென்மாநிலங்களுக்கு தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்புடன் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் இந்த அலுவலகத்தில் காவலுக்கு இருக்கிறார்கள்.
நேற்றிரவு 9.30 மணிக்கு அந்த அலுவலகத்துக்கு போன் வந்தது. போனில் பேசிய நபர் இந்தியில் பேசினார். தான் யார் என்பதை தெரிவிக்காத அவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசினார்.
அவர் கூறுகையில், "மோடி இப்போது வட மாநிலங்களில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்துக்காக வாகன பேரணியில் வரும்போது அவரை கொலை செய்ய நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறினார். இவ்வாறு சொல்லி விட்டு அடுத்த வினாடியே அந்த மர்ம நபர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் வந்ததும் புரசைவாக்கம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். இதுதொடர்பாக தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் கீழ் இயங்கும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. முதல்கட்ட விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து பேசி இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் மத்திய பிரதேசத்தில் உள்ள போலீசாருக்கும், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மத்திய பிரதேச போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து பேசிய நபரை கண்டுபிடிக்க அவரது தொலைபேசி அழைப்பு வந்த இணைப்பை வைத்து அந்த சிக்னல் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர் பயன்படுத்திய சிம்கார்டு பற்றியும் தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவரது வாகன பேரணி நாட்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.