தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை முன்பதிவு தொடங்கியது- 10 நிமிடங்களில் ரெயில் டிக்கெட் விற்று தீர்ந்தன

Published On 2023-07-12 04:03 GMT   |   Update On 2023-07-12 06:09 GMT
  • தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
  • குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சென்னை:

சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் குடும்பமாக சென்று கொண்டாடி விட்டு பின்னர் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்புவார்கள்.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ரெயில் முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்பு செய்யும் வகையில் இன்று தொடங்கியது.

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் வருகிறது. அதனால் சொந்த ஊர் செல்பவர்கள் வியாழக்கிழமை (9-ந்தேதி) முதல் பயணத்தை தொடங்குவார்கள்.

அந்த அடிப்படையில் அதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் முன்ப திவு மையங்கள் வழியாக தொடங்கின. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்கள் பயணம் என்பதால் இன்று குறைந்த அளவிலேயே டிக்கெட் பதிவானது.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேரத்தில் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் செல்வதை தவிர்க்கும் வகையில் இப்போதே பய ணத்தை திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

நவம்பர் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கு நாளை முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 11-ந்தேதிக்கு வருகிற 14-ந்தேதியும், தீபாவளிக்கு முதல் நாள் பயணம் செய்ய வருகிற 15-ந்தேதியும் முன்பதிவு நடைபெறும்.

தீபாவளி பண்டிகை முன்பதிவு பெரும்பாலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக வீடுகளில் இருந்தவாறே முன்பதிவு செய்கின்றனர். குறைந்த அளவில் தான் முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று முன்பதிவு செய்கிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணா நகர், தி.நகர், கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தீபாவளி முன்பதிவிற்கான கூட்டம் குறைந்த அளவில் இருந்தது. ஆனாலும் முன்பதிவு செய்ய வந்த பயணிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டனர்.

காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியதும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு செல்ல உறுதியான டிக்கெட் கிடைத்தது. 10 நிமிடங்களில் முக்கிய ரெயில்களின் இடங்கள் நிரம்பின. பின்னர் காத்திருப்போர் பட்டியல் தொடங்கின.

நாளைய முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும். அதைவிட வெள்ளிக்கிழமை அன்று முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் 3, 4 நாட்கள் தாங்கள் செய்து வரும் கடையை மூடி விட்டோ, மாற்று ஏற்பாடு செய்து விட்டோ வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News