தமிழ்நாடு

நூல் வழங்குவதில் தாமதம்- இலவச வேட்டி உற்பத்தி 20 சதவீதம் மட்டுமே நிறைவு

Published On 2024-10-18 04:26 GMT   |   Update On 2024-10-18 04:26 GMT
  • கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது.
  • சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.

ஈரோடு:

பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளி கள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கு 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகள், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 471 சேலை உற்பத்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது. ஆனால் வேட்டி கரைக்கான நூல், பாபின் கட்டை போதிய அளவு வராததால் குறைந்த தறிகளில் மட்டும், வேட்டி உற்பத்தி பணி நடக்கிறது. இலவச வேட்டி உற்பத்தி பணி 15 முதல் 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.

சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். ஆனாலும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காததால் உற்பத்தி பணி தொடங்கவில்லை.

இதுகுறித்து விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பொங்கலுக்கான வேட்டி, சேலை பணியை வருகின்ற டிசம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடித்து அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்டி, சேலையை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் தீபாவளிக்கு இன்னும் 13 நாட்களை உள்ள நிலையில் நெசவாளர்களுக்கு புதிய ஆர்டரை வழங்கி கூலி பணத்தை விடுவித்தால் சங்கம் மூலம் போனஸ் வழங்க இயலும்.

இது தவிர கடந்தாண்டுகளில் உற்பத்தியான இலவச வேட்டி, சேலைக்கு வழங்க வேண்டிய ரூ.123 கோடி நிலுவையை முதற்கட்டமாக வழங்கினால் கூட ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தீபாவளி கொண்டாடும் அளவுக்கு குறைந்தபட்ச தொகை கிடைக்கும்.

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க செய்வதுடன் பழைய நிலுவை தொகையையும் விடுவிக்க நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவர் அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News