60 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சி அளித்து வந்த பழமையான நுழைவு வாயில் இடித்து அகற்றம்
- அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
- பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.
அதே போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று பெயர் பெற்று திகழ்ந்தது.
மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்புகளையும் பெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோபி செட்டி பாளையத்தில் கடந்த 1-12-1958-ம் ஆண்டு 45-வது அரசியல் மாநாடு நடை பெற்றது. இதையொட்டி கோபி கிழக்கு பகுதியிலும் (கரட்டூர்), மேற்கு பகுதியிலும் (குடிநீர் மேல்நிலை தொட்டி அருகிலும்) நகராட்சி சார்பாக அப்போதே 2 நுழைவு வாயில்கள் (ஆர்ச்) கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
அப்போது முதல் ஈரோடு, சத்தியமங்கலம் ரோட்டில் கோபிசெட்டிபாளையம் என வளைவு அமைக்கப்பட்டு தூண்களுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக பொதுமக்களை வரவேற்கும் வகையில் நிலைத்து நின்று வந்தது.
இந்த நிலையில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு கரட்டூர் ஆர்ச் மீது லாரி மோதியதில் அது இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து புதியதாக கிழக்கு பகுதியில் உள்ள ஆர்ச் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில் சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரோடு-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிசெட்டி பாளையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான நுழைவு வாயில் (ஆர்ச்) ரோடுகள் வரிவாக்கம் பணிக்காக அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று (புதன் கிழமை) இரவு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக எந்திரங்கள் மூலம் பணியாளர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அகற்றினர். இதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
கோபியின் பெருமையை நிலை நாட்டும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.