தமிழ்நாடு
கருப்புக்கொடியுடன் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்கள்.

50 நாட்களாக தேங்கி கிடக்கும் மழைநீர் அப்புறப்படுத்த கோரி கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

Published On 2024-02-13 04:14 GMT   |   Update On 2024-02-13 04:14 GMT
  • கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
  • ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த கனமழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரிகுளம் உடைந்து, குளத்து தண்ணீர் பல்வேறு ஊர்களுக்குள் புகுந்தது.

இதில் உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை கிராமம் அதிகமாக பாதிக்கப்பட்டு நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்ட தனித்தீவாக மாறியது.

போக்குவரத்து வசதி இல்லாமல் வெள்ளாளன் விளை கிராமத்தின் சர்ச் வழியாக வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இதனால் வட்டன்விளையில் இருந்து உடன்குடி மற்றும் பரமன்குறிச்சிக்கு நேர்வழியில் செல்லும் பாதை தடைபட்டு பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். பல அடி உயரத்திற்குநீர் தேங்கி நிற்கும் வட்டன்விளை வடக்குத் தெரு தார்ச்சாலை வழியாக பரமன்குறிச்சி- மெஞ்ஞான புரம் பிரதான சாலைக்கு செல்ல தற்காலிகமாக மணலை கொட்டி சாலை வசதி செய்து தர வேண்டி இப்பகுதியில் உள்ள மக்கள் மாவட்ட கலெக்டரிடமும், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இைதயொட்டி நேற்று ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டது சுமார் 50 நாட்களாக 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் நாங்கள் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறோம் என்றும், 2 கி.மீ. வழியாக சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் திரண்ட ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், கிராம அதிகாரி கணேசபெருமாள் மற்றும் அதிகாரிகள் ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஓரு வாரத்திற்கு தற்காலிக சாலை வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாய தோட்டங்களில் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. தோட்டத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News