லஞ்சம் வாங்கி பிடிபட்ட துணை தாசில்தார்- ஆஸ்பத்திரி சிகிச்சையில் இருந்து தப்பி ஓட்டம்
- லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
- நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் துரைராஜ் விண்ணப்பித்தார். அப்போது தடையின்மை சான்று வழங்குவதற்கு துரைராஜிடம் துணை தாசில்தார் பழனியப்பன் (வயது 42) ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பழனியப்பனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி துரைராஜ் நேற்று மாலை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே மறைந்திருந்தனர்.
அங்கு துரைராஜ் லஞ்ச பணத்தை பழனியப்பனிடம் கொடுக்க முயன்றார். அப்போது பழனியப்பன், அலுவலகத்தில் இருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுச்சாமியை (42) லஞ்ச பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து நல்லுச்சாமி துரைராஜிடம் இருந்து பணத்தை வாங்கி, பழனியப்பன் வைக்க கூறிய இடத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று நல்லுச்சாமியையும், பழனியப்பனையும் கையும், களவுமாக பிடித்தனர். அப்போது நல்லுசாமி துணை தாசில்தார் கூறியதன் அடிப்படையில் தான் பணம் பெற்றதாக கூறினார். இந்த நிலையில் துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
இதையடுத்து நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறிய துணை தாசில்தார் பழனியப்பனை சிகிச்சைக்காக அவரது மேலதிகாரி தாசில்தார் சரவணன் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்ட போது, அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேண்டும் என்று நெஞ்சு வலிப்பதாக கூறி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து இன்று காலை அவரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேம சித்ரா, தாசில்தார் சரவணனை தொடர்பு கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வாருங்கள்.பழனியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அப்போது காலை 7 மணி அளவில் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்கேன் எடுக்க செல்வதாக வார்டில் இருந்து சென்ற அவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஹேம சித்ரா கூறும்போது, பழனியப்பனை விசாரணை செய்வதற்கு முன்பாக அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவரது உயர் அதிகாரியான தாசில்தார் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர் அங்கிருந்து மாயமானதாக தகவல் சொல்கிறார்கள். நான் தாசில்தாரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன் என்றார்.
தப்பி ஓடிய பழனியப்பனுக்கு பெரம்பலூர் நாரணமங்கலம் சொந்த ஊராகும். அவர் அங்கு பதுங்கி இருக்கிறாரா என பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடிபட்ட துணை தாசில்தார் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரம்ப லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.