பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதாகி தப்பி ஓடிய துணை தாசில்தார் சஸ்பெண்ட்
- கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.
- அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் பழனியப்பன், கீழக்கரை விஏஓ நல்லுசாமி ஆகியோர் கடந்த 1-ந்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரை பெரம்பலூர் தாசில்தார் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து 2-ந்தேதி விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.