உத்திரமேரூர் அருகே கூட்டத்தில் பட்டாசுகள் வெடித்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
- பக்தர்கள் தலையில் தீச்சட்டி மற்றும் அம்மன் பூ குடங்களுடன் தீ மிதிக்க தொடங்கினார்கள்.
- நெருப்பில் விழுந்த நபருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அம்மினி குளக்கரையில் உள்ள கன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
தீமிதி விழாவையொட்டி காலையில் கன்னியப்பன் ஆலயத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் ஏழு கன்னிமார்கள் பூ குடம் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து கெங்கையம்மன் ஆலயம் அருகே இரவு தீமிதி விழாவிற்கான நெருப்புகள் கலைக்கப்பட்டு தீ மிதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கே, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதி விழா நடைபெறும் இடத்தை சுற்றி இருந்தனர். அப்போது, வாணவேடிக்கை வெடிகள் வெடித்தபோது எதிர்பாராத விதமாக ஒரு வாணவேடிக்கை வெடி பக்தர்கள் இருந்த பக்கம் திரும்பி பக்தர்கள் மேல் விழுந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரின் ஆடையில் நெருப்பு பட்டதால் பரபரப்பு நிலவியது.
அதனையடுத்து பக்தர்கள் தலையில் தீச்சட்டி மற்றும் அம்மன் பூ குடங்களுடன் தீ மிதிக்க தொடங்கினார்கள்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கால் சரியாக நடக்க முடியாத நபர் ஒருவர் திடீரென தீயில் இறங்கி நடக்க தொடங்கி நடக்க முடியாமல் நெருப்பில் விழுந்தார்.
உடனே அருகில் இருந்த பக்தர்கள் பலர் அவரை நெருப்பில் இருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றினார்கள்.
அதில், நெருப்பில் விழுந்த நபருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நபரை பக்தர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.