மழையால் பாதித்த பொதுமக்களுக்கு 8 லட்சத்து 45 ஆயிரம் உணவு பொட்டலம் வினியோகம்
- 411 நிவாரண முகாம்களில் 5565 குடும்பங்களை சேர்ந்த 18,750 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
- நிவாரண முகாம்கள் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த பொதுமக்களுக்கும் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டது.
சென்னை:
மிச்சாங் புயல் தமிழக கடலோர மாவட்டங்களை கடந்து சென்ற நிலையில், கடலோர மாவட்டங்களில் அதிக மழையின் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் பேரிடர் துறை சார்பில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
இதையொட்டி 411 நிவாரண முகாம்களில் 5565 குடும்பங்களை சேர்ந்த 18,750 பேர் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு 52 ஆயிரத்து 981 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
நிவாரண முகாம்கள் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த பொதுமக்களுக்கும் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னையில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 280 உணவு பாக்கெட்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 64,380 உணவு பொட்டலங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 58 உணவு பொட்டலங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 91 ஆயிரத்து 983 உணவு பொட்டலங்கள் என மொத்தம் 8 லட்சத்து 44 ஆயிரத்து 601 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக 1-ந்தேதி முதல் இதுவரை 8 பேர் இறந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.