தமிழ்நாடு

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி, கைதான மேலாளர் வனிதா. 

தீபாவளி சீட்டு பணம் மோசடி: தனியார் பைனான்ஸ் நிறுவன பெண் மேலாளர் கைது

Published On 2023-12-01 06:53 GMT   |   Update On 2023-12-01 06:54 GMT
  • தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
  • சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

மத்தூர்:

போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.

தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.

இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.

தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News