தமிழ்நாடு

ஜனவரி மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2023-10-14 06:33 GMT   |   Update On 2023-10-14 06:33 GMT
  • மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
  • தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது.

மதுரை:

விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேய நத்தத்தில் உள்ள வீரசின்னம்மாள் கோவில் உள்ளது. தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் குலதெய்வ கோவிலான இங்கு சாமி கும்பிடுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் சோதனை செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு பின்னர் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

தமிழகத்தில் அதிகமாக லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. அதனால் இது போன்ற சோதனைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த சோதனையை தே.மு.தி.க. வரவேற்கிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. நிச்சயமாக ஜனவரி மாதம் கூட்டணி குறித்தும், தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்து அதிகமாக உள்ளது.

அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி வந்தாலும் இதே நிலை தான் தொடர்கிறது. மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது. உரிமைக்காக போராடுபவர்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக அரசு அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

இஸ்ரேல் போரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News