வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்பதால் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு
- 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
- சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தி.மு.க.வில் கிட்டத்தட்ட 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர்.
துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.
இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர்.
கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆனால் அ.தி.மு.க.வில் சத்தமின்றி வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
எனவே அதிக உறுப்பினர்களை தி.மு.க. சேர்க்குமா? அல்லது அ.தி.மு.க. சேர்க்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.