தமிழ்நாடு

  டி.ஆர்.பாலு       ஆர்.என்.ரவி

திராவிடம் என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு போய் இருக்கிறார்- ஆளுநர் பேச்சு குறித்து திமுக கருத்து

Published On 2022-07-12 00:32 GMT   |   Update On 2022-07-12 00:54 GMT
  • தமிழக ஆளுநர்கள் யாரும் சர்ச்சை கருத்துகளை சொல்லியது இல்லை.
  • புத்தகங்களை ஆளுநர் வாசித்தாலே உண்மையை புரிந்து கொள்ளலாம்.

ஆரியர், திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.மான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் சர்ச்சை கருத்துகளைப் பொது வெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைச் சொன்னார். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை திமுக சார்பில் நான் அளித்தேன். இந்த நிலையில், திராவிடர் குறித்து ஆளுநர் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600-ம் ஆண்டு என வைத்துக்கொண்டால், அதற்கு முன்னதாக திராவிடம் என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா?, இல்லை என்று ஆளுநர் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்?.

ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானது என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் வாசித்தாலே ஆரியர் - திராவிடர் என்ற உண்மையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

திராவிடம்' என்பது இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. வடக்கு-தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்தது. ஆரியன்-திராவிடன் என்ற இனப்பாகுபாடாக இருந்தது. தமிழ்-சமஸ்கிருதம் என்ற மொழிப்பாகுபாடாக இருந்தது.

இப்படி காலம்காலமாக இருந்த இன-இட-மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழர் தம் அரசியலை-முன்னேற்றத்தை-எழுச்சியை உருவாக்க முனைந்தது தான் திராவிட இயக்கம். கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருக்கிறது.

ஆயிரமாண்டு பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வருகிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் திராவிடம் என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதி தான் கவர்னரின் பேச்சில் வெளிப்படுகிறது. கடந்த கால வரலாற்றுக்கு கற்பனை முலாம் பூசி, உண்மையான பிரச்சினைகளை திசை திருப்ப முன்வர வேண்டாம்.

கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம்கூட ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டவைதான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News