திமுக நிர்வாகி கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்
- திடீரென அந்த கும்பல் ஆராமுதனின் கார் மீது வெடிகுண்டுகளை வீசியதும் இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கி ஓட்டை விழுந்தது.
- கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
ஈரோடு:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆரா முதன் (வயது 54). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். தற்போது காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பெருமாள் கோயில் எதிரே காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு தனது காரில் ஆராமுதன் சென்றார்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய ஆராமுதன் அவருடன் வந்த 2 பேருடன் சாலை ஓரத்தில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது காரில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆராமுதனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். மேலும் அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆராமுதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆராமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற த்தில் இக்கொலை தொட ர்பாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி பிரிவு டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 22), மண்ணிவாக்கம் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராக்கியபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த சம்பத்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேர் சரண் அடைந்தனர்.
இதையடுத்து சரணடைந்த 5 பேரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.