தமிழ்நாடு (Tamil Nadu)

அடிப்படை ஏற்பாடுகளை செய்யாமல் புறக்கணித்த தி.மு.க. அரசே முழு பொறுப்பு: அண்ணாமலை

Published On 2024-10-06 23:54 GMT   |   Update On 2024-10-06 23:54 GMT
  • வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.
  • 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது.

கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் தி.மு.க. அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.

முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக்கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த தி.மு.க. அரசே முழு பொறுப்பு.

தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News