ஓரிரு அமாவாசைகளுக்கு மேல் தாங்காது: விஜய் கட்சியை மறைமுகமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
- கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.
- தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.
நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-
நாகையில் நடக்கும் இந்த கட்சியில் இணையும் நிகழ்ச்சியை பார்க்குபோது, மீனவர்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கையோடு உள்ளனர் என்பது தெரிகிறது. முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. ஒரு அமாவாசை தாங்கும். அல்லது இரு அமாவாசை தாங்கும். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே இருக்கும் கட்சியைப் பார்த்து புது கட்சி தொடங்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.
யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினார்கள். கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது. இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க. இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.