விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால்.. எல்லாமே மாறி இருக்கும்- ஆர்.எஸ்.பாரதி
- விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.
- முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்தார். அவர் மறைந்த செய்தி வந்த சில மணி நேரத்திலேயே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அவரிடம் பிரேமலதா உள்பட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அவராகவே உத்தரவிட்டார்.
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைக்க கலைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.
அவர் மட்டும் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், கலைஞர் முதலமைச்சராக இறந்திருப்பார். இன்னும் சொன்னால் அவர் மறைந்திருக்வே மாட்டார். அந்த தெம்பிலேயே அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.
இன்னும் ஒரு படி மேலே சொன்னால், ஜெயலலிதா கூட இறந்திருக்க மாட்டார். கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் ஜெயலலிதா அமெரிக்கா சென்று அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்.
அதேபோல், விஜயகாந்தும் இறந்திருக்க மாட்டார். அன்று படுத்தவர் அதோடு எழுந்திருக்கவில்லை. அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்து, இன்றும் எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பார்.
ஆனால், விஜயகாந்த் திமுகவுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தார். எதிர்க்கட்சி தலைவராக இல்லாத நிலையில் கலைஞர் மறைய செய்ய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்.
இருந்தாலும், விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின் அரசு மரியாதை செய்தார் என்றால் அந்த வலி அவருக்கு தெரியும். கலைஞர் இறந்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கை போட்டு கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.