தமிழ்நாடு

தி.மு.க. எம்.பிக்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கு உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2024-06-08 13:50 GMT   |   Update On 2024-06-08 14:13 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியது.
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.

பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வெற்றிக்கு வழி நடத்தி தி.முக. தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

ஜூன் 14ஆம் தேதி கோவையில் கலைஞருக்கு நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரை மணி நேரம் நடைபெற்ற எம்.பி. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.

நீட் தேர்வு விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாருக்கு கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News