தமிழ்நாடு

தமிழக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நீதி கேட்டு போராட்டம்

Published On 2024-08-17 05:07 GMT   |   Update On 2024-08-17 05:07 GMT
  • வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
  • நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) காலை 6 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் புடுபட்டு வருகின்றனர்.

இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது எனவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதேபோல், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில், ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

ஈரோட்டில் 400 மருத்துவமனைகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டமருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ச் அணிந்து, பதாகைகளை ஏந்தி வந்து மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News