நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து கடைக்கு 'சீல்'
- நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது.
- மருத்துவம் பயிலாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில், சுகாதார நலப் பணிகள் இயக்குனர் மருத்துவர் பிரேமலதா போலி மருத்துவர்களையும், போலி மருத்துவமனைகளையும் ஒழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வீ.கே.புதூர் அருகே கழுநீர்குளம் பகுதியில் உள்ள ஒரு மெடிக்கலில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரேமலதா அங்கு திடீர் ஆய்வு நடத்தினார்.
அதில் நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மருந்து கடை உரிமம் மட்டும் பெற்று கொண்டு கிளினிக் நடத்தியதாகவும், மருத்துவ ஸ்தபன சட்டத்தின்படி பதிவு சான்று பெறாமல் மருத்துவம் பயிலாத நபர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வந்ததாகவும் அதனை தடுக்கும் வகையில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவர் அருள் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் அருண் மற்றும் ஆனந்தராஜ், தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் மீனா, ஆர்.ஐ. மாலினி, கிராம நிர்வாக அலுவலர் சேர்மப்பாண்டி மற்றும் போலீசார் முன்னிலையில் அந்த மருத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கூறுகையில், மருத்துவம் பயிலாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனை என சுகாதார கட்டமைப்பு தமிழகத்தில், குறிப்பாக தென்காசி மாவ ட்டத்தில் செயல்பட்டு வரு கிறது. பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திட வேண்டும் என்றார்.