மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த பெண்- சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார்.
- சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடையின் பின்புறம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஓட்டை போட முயற்சித்துள்ளனர்.
கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுசிலா (வயது55) என்பவர் மது போதையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார். வாகன ஓட்டிகள் மீறி செல்ல முயன்றால் அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. விபரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் சுசீலாவை சமாதானம்பபடுத்த முயன்றனர். அப்போது எனது மகன்களான ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் எனது மருமகன் கண்ணன் ஆகிய 3 பேர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியதாக வாதாடினார். மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோரை போலீசார் கைது செய்ததால் அவ்வப் போது மதுபோதையில் போலீஸ் நிலையம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக செயல்பட்டார். பின்னர் சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.