சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து செல்லும் கிராம மக்கள்
- கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம்.
- இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முறையாக சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் தொட்டில் கட்டி அவரை அழைத்து சென்றனர். இதனை வீடியோவாக பதிவு செய்த கிராம மக்கள் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு தங்கள் கிராமத்தின் அவல நிலை குறித்து குமுறியுள்ளனர்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
பல வருடமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். கிராமத்தில் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்படும் நேரங்களில் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாத காரணத்தால் தொட்டில் கட்டிதான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம். அப்போது அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து தேர்தல் முடிந்தவுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்களித்தனர்.
அதன்பின்பு இதுவரை யாரும் எங்களை பார்க்க வரவில்லை. இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.