திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் வழிபாடு
- துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
- துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு கோயில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து அகோரமூர்த்திக்கு பல்வேறு நறுமண பொருட்களால் 4 மணி நேரம் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவையொட்டி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.