வேடசந்தூர் தி.மு.க. பிரமுகரின் பங்களாக்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது
- தமுத்துபட்டியில் வீரா சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்து பங்களாவில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அங்கு கூடியிருந்த தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் இவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு உபயோக பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களை கவனித்து வந்தார். இதில் பல பார்கள் அனுமதியின்றியும், சில பார்கள் முறையாகவும் நடத்தி வந்துள்ளார். அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் நடத்தி பல கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் நேற்று மதியம் 2.15 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் சென்றனர். வீட்டில் சாமிநாதனின் தாயார் சரஸ்வதி (71) இருந்தார். அவர் 2 பேர் வீட்டுக்குள் நுழைவதை பார்த்து பூட்டிய வீட்டுக்குள் எவ்வாறு நுழைந்தீர்கள் என்று கேட்டார். அப்போது அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து வந்ததாகவும், மேலும் சிலர் வாசலில் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
எதற்காக வந்தீர்கள் என கேட்டதற்கு உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது சரஸ்வதி எனது மகன் மிகவும் நல்லவன். அவன் நேர்மையாக சம்பாதித்து கட்சியில் நல்ல பெயரை வைத்துள்ளான் என கூறினார்.
வீட்டில் ஒரு அறையில் சரஸ்வதியை உட்கார வைத்து விட்டு அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். இந்த வீடு சாமிநாதனின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வீட்டில் இருந்த அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாலை 6.20 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துபட்டியில் வீரா சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்து பங்களாவில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு பொருட்களை கைப்பற்றிச் சென்றனர்.
நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 6 மணி வரை நடந்தது. சுமார் 18 மணி நேரம் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது அப்பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அங்கு கூடியிருந்த தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தனியார் உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது.
சோதனை முடித்து இன்று அதிகாலை வெளியே வந்த அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு "நோ தமிழ். ஐ ஆம் ஹிந்தி" என தெரிவித்தனர். அதன் பின்னர் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்ட போதும் அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக தி.மு.க. நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.