தமிழ்நாடு

அடிப்படை வசதிகளுக்காக கொடைக்கானல், குஜிலியம்பாறையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Published On 2024-03-23 07:13 GMT   |   Update On 2024-03-23 07:13 GMT
  • சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.

கொடைக்கானல்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து வருவது அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளக்கவி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி என்பதே கிடையாது. குண்டும், குழியமான மலைச்சாலையில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.

மேலும் குடிநீருக்காக பெண்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

எங்கள் கோரிக்கையை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ ஊராட்சி தலைவர், யூனியன் தலைவர் என அனைவரிடமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள். எனவே இந்த முறை கண்டிப்பாக புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனர்.

இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News