ஆர்சிபி-யுடன் ஒப்பிட்டு பாஜகவை கிண்டல் செய்த டி.ஜெயக்குமார்
- பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.
- தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்தார்.
தோல்விக்கு பின் அதிமுக தலைவர் எஸ்.பி வேலுமணி, "பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு அண்ணாமலை பதில் கொடுத்திருந்தார். அப்போது அதிமுக தலைவர்கள் தோல்விக்கு வேறு காரணங்கள் கூறும்போது எஸ்.பி. வேலுமணி இந்த காரணத்தை கூறுகிறார். அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி இடையே உள்கட்சி பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது" என்றார்.
இந்த நிலையில் எஸ்பி வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல அதிமுக-வின் முன்னாள் அமைச்சரான டி. ஜெயக்கமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:-
பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு. எங்களது தலைவர்களை விமரச்னம் செய்தவர்களைதான் நாங்கள் விமர்சனம் செய்தோம்.
தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அதிமுக தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி. 2026-ல் தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி செய்யப் போகிறது என்றால் அது அதிமுக கட்சிதான்.
அண்ணாமலை புள்ளி ராஜாவாகிவிட்டார். அந்த கட்சி எவ்வளவு? இந்த கட்சி எவ்வளவு? என புள்ளி விவரங்கள் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாகதான் செயல்பட்டார். ஒரு கட்சியின் தலைவராக அவரது பேச்சு இல்லை. 2014-ல் பாஜக கூட்டணி வாங்கிய வாக்கை விட தற்போது குறைவு. இதை ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார்?.
தமிழகத்தில் பாஜக ஆர்சிபி அணி போன்றது. தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாங்கள் சிஎஸ்கே. 30 ஆண்டுகள் வெற்றிகளை குவித்தோம். வரவிருக்கும் தேர்தலில் சாதனைகள் குவிக்கப் போகிறோம்.
கேரளாவில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றார்களா?. புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு சீன் காட்டுவது தமிழகத்தில் எடுபடாது.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.