முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்- மின்சார வாரியம்
- மழை காற்று காரணமாக எதேச்சையாக நடந்த சம்பவம் என்று மின் பகிர்மான தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.
- அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி மின்வாரியம் விரிவான விசாரணை மேற் கொண்டது.
சென்னை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்தபோது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின் தடை ஏற்பட்டது. சுமார் 30 நிமிட நேரம் கழித்துதான் மின்சாரம் வந்தது.
இது திட்டமிட்ட சதி செயல் என்று அரசு மீது பா.ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டினர். ஆனால் மின்தடை ஏற்பட்டதற்கு யாரும் காரணம் இல்லை. மழை காற்று காரணமாக எதேச்சையாக நடந்த சம்பவம் என்று மின் பகிர்மான தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.
ஒரு மாநிலத்திற்கு மிக முக்கிய வி.ஐ.பி. வரும்போது 24 மணிநேரமும் மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். அதை கடைபிடித்ததாகவும் அவர் கூறி இருந்தார்.
ஆனாலும் அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி மின்வாரியம் விரிவான விசாரணை மேற் கொண்டது.
இது தொடர்பாக இப்போது அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் மணி வண்ணன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகையின் போது அவர்கள் வந்து செல்லும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் முன் கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதற்காக முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.