தமிழ்நாடு

உடுமலை அமராவதி அணை கரையோரம் முகாமிட்டுள்ள யானைகள்.

குடிநீர்- உணவு தேடி உடுமலை அமராவதி அணைக்கு படையெடுக்கும் யானைகள்

Published On 2023-06-28 05:18 GMT   |   Update On 2023-06-28 05:18 GMT
  • ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.
  • ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும்.

உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி, உடுமலை, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் அரிய வகை விலங்குகள் வசிக்கும் பகுதியாக உள்ளது.வனப்பகுதிகளில் வறட்சி, தென்மேற்கு பருவ மழை தொடங்க தாமதம் காரணமாக காடுகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் குடிநீர் மற்றும் உணவுக்காக அமராவதி அணைக்கு யானைக்கூட்டங்கள் படையெடுத்து வருகின்றன. அணையிலும் நீர் இருப்பு குறைந்து புல்வெளிகளாக, நிலப்பகுதிகளாக காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.

உடுமலை - அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில் உடுமலை - மூணாறு சாலை காணப்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில் காலை, மாலை நேரங்களில் யானைக்கூட்டங்கள், ஒவ்வொன்றாக இந்த சாலையை கடக்கின்றன.

மேலும் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறை சோதனை சாவடிகளில் அறிவுறுத்தப்படுவதோடு வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும். யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. மூணாறு சாலையிலும் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News