கோவையில் இருந்து மஞ்சூருக்கு சென்ற அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள் கூட்டம்
- அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
- சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக சாலையில் சுற்றிய காட்டு யானைகள் அதன்பின்னர் சாலையில் இருந்து இறங்கி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது.
சமீப நாட்களாக அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். கெத்தை அருகே அரசு பஸ் சென்றபோது, தனது குட்டியுடன் சென்ற யானைக்கு பக்கபலமாக சென்ற 4 காட்டு யானைகள் பஸ்சை திடீரென வழிமறித்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் டிரைவர் சிறிது தொலைவுக்கு முன்பே பஸ்சை நிறுத்தினார்.
யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக சாலையில் சுற்றிய காட்டு யானைகள் அதன்பின்னர் சாலையில் இருந்து இறங்கி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து மஞ்சூருக்கு சென்றது. இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை-மஞ்சூர் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகள் கூட்டத்தை காணலாம்