தமிழ்நாடு

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

Published On 2024-07-22 04:48 GMT   |   Update On 2024-07-22 06:22 GMT
  • பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.
  • முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 2 லட்சம் மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு இன்று தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெறும்.

பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது.

தமிழகத்தில் தற்போது 433 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2.41 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எல்லோருக்கும் இடங்கள் கிடைக்கும். ஆனால் விரும்பிய கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் கிடைப்பதுதான் கடினம்.

பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடங்கள் உள்ளன. 3 சுற்றுகளாக ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வு முடிந்த பிறகும் மாணவர்கள் விரும்பினால் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த ஆண்டு 8 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. புதிதாக 3 கல்லூரிகள் உருவாகி உள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags:    

Similar News