ஈரோட்டில் ஒரே ஆண்டில் 15 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு குறைந்தது
- நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும்
- எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது, போதிய விலை கிடைக்காததால் விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகள் போன்ற காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவது வேளாண்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
தமிழகத்தில் காவிரி நதி பாயும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வது ஈரோடு மாவட்டத்தில் தான். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் பாசனம் நடைபெறுகிறது.
நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நெல் சாகுபடி பரப்பு கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு பேசி விற்பனை செய்வதும், வேளாண் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காதது போன்ற காரணங்களால் நெல் சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி, கொடிவேரி, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நன்செய், புன்செய் உள்ளிட்ட 3 சீசன்களிலும் ஒவ்வொரு சீசனுக்கும் தேவைக்கேற்ப சராசரியாக 30 முதல் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
நெல் கொள்முதல் மையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை தேவைக்கேற்ப மாடர்ன் ரைஸ் மில்களுக்கு அனுப்பி அரிசி உற்பத்தி செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடமும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்கின்றனர்.
இருப்பினும் பெரும்பகுதி நெல், அரசு கொள்முதல் மையங்கள் மூலமாக அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 76 ஆயிரத்து 223 ஏக்கரிலும், 2022-23ம் ஆண்டில் 75 ஆயிரத்து 608 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி குறைந்திருந்த நிலையில் கடந்த 2023-24ம் ஆண்டில் நெல் சாகுபடி மேலும் 15 ஆயிரம் ஏக்கர் குறைந்து 60 ஆயிரத்து 198 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி ஆனதாக வேளாண் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் கடந்த 2021-22ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையங்களில் இருந்து மொத்தம் 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆனது. ஆனால் 2022-23ம் ஆண்டில் நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 71 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதலானதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 ஆயிரம் மெட்டரிக் டன் நெல் கொள்முதல் குறைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு 2024-25ம் ஆண்டில் தற்போது தான் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிலும் நெல் நடவு கடந்த ஆண்டை விட குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் வலது கரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் விவசாய தொழில்களை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.
விவசாய குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை விவசாயிகள் குறைந்து போவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பலரும் நன்கு படித்து தொழிலதிபர்கள் ஆகவும் ஐ.டி., அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு செல்கின்றனர். விவசாயத் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காததும் விவசாய தொழிலை கைவிட காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.