தமிழ்நாடு

ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு எக்மோ கருவி பொருத்தி தீவிர சிகிச்சை

Published On 2024-03-25 06:04 GMT   |   Update On 2024-03-25 06:04 GMT
  • டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
  • கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கோவை:

ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.

கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News