தமிழ்நாடு

ராகுல் குறித்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜூ - அ.தி.மு.க. தலைமையின் அழுத்தம் காரணமா?

Published On 2024-05-22 07:47 GMT   |   Update On 2024-05-22 07:47 GMT
  • ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன்.
  • எக்ஸ் தள பதிவை பாராட்டி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதாவது, ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுடன் கூடிய கருத்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இதனையடுத்து, பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய நிலையை அறிந்து காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. ஆதரிக்க தொடங்கி விட்டதோ என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்றார். அவருடைய இந்த பதிவானது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது எக்ஸ் தள பதிவை பாராட்டி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இன்று திடீரென, ராகுலை பற்றி புகழ்ந்த பதிவை செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார். ஒருவேளை அ.தி.மு.க. தலைமை கொடுத்த அழுத்தத்தால் செல்லூர் ராஜூ, ராகுல் காந்தி குறித்த பதிவை நீக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Tags:    

Similar News