தமிழ்நாடு

பலத்த மழை- இடி, மின்னல் தாக்கியதில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

Published On 2024-10-13 08:15 GMT   |   Update On 2024-10-13 08:15 GMT
  • வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஒத்தபுலி கிராமத்தில் பழனியப்பா நகர் பகுதியில், சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகா கிராக்கர்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

அதே பகுதியில் பட்டாசுகள் இருப்பு வைப்பதற்காக குடோன் ஒன்றும் வைத்துள்ளார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வகையிலான பட்டாசு ரகங்களை ராஜேந்திரன் தன்னுடைய குடோனில் இருப்பு வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென ஒத்தபுலி கிராமத்தில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டாசு குடோன் மீது இடி, மின்னல் தாக்கியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் மழையிலும் நனைந்தவாறு பல மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இருந்தபோதிலும், தொழிலாளர்கள் யாரும் அப்போது பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News