உறுப்பு தானம் செய்வதை பதிவிடும் வசதி- புதிய டிரைவிங் லைசென்ஸில் 16 வகை மாற்றம்
- பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
- புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று ஆகியவை ஒரே மாதிரியாக வழங்கப்படும் என இந்திய அரசு 2019-ல் அறிவித்தது. அதன்படி 12 சரகங்களாக செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.), 54 பகுதி அலுவலகங்களில் புதிய வகை ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை, சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சேலம், வேலூர் சரகத்தை அடுத்து திருப்பூர் சரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் சரகத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கி, 23-ந்தேதி வரை 11 அலுவலகங்களில் மொத்தம் 2,063 புதிய வகை ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது, இந்த உரிமத்தில், தமிழ்நாடு அரசு என்பதை டி.என் என ஒரு வட்டத்துக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
யூனியன் ஆப் இந்தியா என்பதை மாற்றி இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ் என்றும், இஸ்யூடு பை கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு என தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா? இல்லையா? என்பதும், அவசர கால தொடர்பு எண் , உரிமம் பெற்றவரின் கையெழுத்து என 16 வகை மாற்றம் இடம்பெற்றுள்ளது.
அதுபோல் பதிவுச்சான்றிதழில் (ஆர்.சி) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும்,பகுதி அலுவலகங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.