தமிழ்நாடு

சொத்துக்களை அபகரித்து தந்தையை பிச்சை எடுக்க வைத்த கொடூர மகன்

Published On 2024-05-01 07:09 GMT   |   Update On 2024-05-01 07:09 GMT
  • கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார்.
  • ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (76). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு பாலாஜி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார். அவரை மகன் பாலாஜி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது. சொத்துக்கள் மற்றும் பணத்தை பறித்த பாலாஜி தனது தந்தை ரகுநாதனை இரக்கமின்றி வீட்டை விட்டு வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த ரகுநாதன் திருவள்ளூர் வீரராகவர் கோவில் முன்பு உணவின்றி, பிச்சையெடுத்து அங்கேயே ஒரு வாரமாக தங்கி இருந்தார்.

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

என் உழைப்பில் வந்த வீடு, நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை எனது மகன் பாலாஜியும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரும் திட்டமிட்டு பறித்து என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். என்னை பசி பட்டினியால் கொடுமை செய்து கொல்லவும் துணிந்து விட்டார்கள்.

அவர்களால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. என் சொத்தையும் எனது மனைவியின் நகைகளையும் அபகரிக்க நினைக்கும் மகன் பாலாஜியிடம் இருந்து என்னை பாதுகாத்து சொத்தை மீட்டு தர வேண்டும்.

இதற்கு உடந்தையாக இருக்கும் மகனின் மனைவி, மாமனார், மைத்துனர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News