புழல் ஜெயிலில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்- சிறை பெண் காவலர்கள் 2 பேர் 'சஸ்பெண்டு'
- கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
- இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
செங்குன்றம்:
பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.
அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.