கோவை, திருப்பூரில் உள்ள பாசி நிறுவன சொத்துக்கள் 2-ந் தேதி ஏலம்
- பாசி நிறுவனத்தின் சொத்துக்கள் வருகிற 2-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.
- கோவை விளாங்குறிச்சியில் உள்ள 4,352 சதுர அடியில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.
கோவை:
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு 2009-ல் பாசி போரக்ஸ் டிரேடிங் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்தது. ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு மீண்டும் பணத்தை திரும்பி வழங்கவில்லை.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். ஆனால் விசாரணை சரியாக நடக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ்(43), அவரது தந்தை கதிரவன்(70) மற்றும் கமலவள்ளி(45) 2011-ல் கைது செய்யப்பட்டனர். 2013-ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் ஜாமீனில் வந்தனர்.
இந்த வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார். அதில் மோசடி செய்த மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார். மேலும் இந்த தொகையை இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 1,402 பேர் மட்டுமின்றி இதர முதலீட்டாளர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரித்து வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். இதையடுத்து 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பாசி நிறுவனத்தின் சொத்துக்கள் வருகிற 2-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட பாசி போரக்ஸ் நிதி நிறுவனத்துக்கு, சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இடைமுடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் கோவை விளாங்குறிச்சியில் உள்ள 4,352 சதுர அடியில் உள்ள அசையா சொத்தும் அடங்கும். இச்சொத்து, தமிழக முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997-ன் கீழ் தகுதிபெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் வருகிற 2-ந் தேதி மதியம் 12 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் அறை எண்.240-ல் பொது ஏலம் மூலம் மேற்காணும் சொத்து விற்பனை செய்யப்பட உள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் ஏல நிபந்தனைகள் தொடர்பான விவரங்களை திருப்பூர், கோவை கலெக்டர் அலுவலகங்கள், திருப்பூர், உடுமலை, தாராபுரம், கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், கோவை வடக்கு தாசில்தார் அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம்.
இந்த சொத்து நிலையில் உள்ளவாறே ஏலம் விடப்படும். இதில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தை வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.